எண்ணம் போல் வாழ்க்கை
எல்லாரையும் போல, திருமணத்துக்கு முன்பு நானும் என் மனைவியும் தொலைபேசியில் நிறைய பேசிக்கொண்டிருப்போம்.
வாழ்க்கையைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும், எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதையும் பேசிக்கொண்டே இருப்போம்.
அப்படிப் பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில், என் மனைவி என்னிடம் ஒரு விஷயத்தைச் சொன்னாள்.
அவளுக்கு அப்பா இல்லை. அவளும், அவள் அம்மாவும், அவளுடைய தங்கையும் மட்டும்தான். அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்ததால், அவள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னாள்.
அப்போது நான் அவளிடம் சொன்னேன்.
“நீ கர்ப்பமாகிறப்போ நான் வேலையை விட்டுடுவேன். Freelance பண்ணிக்கிறேன், இல்லையென்றால் Work From Home வசதி இருக்கிற வேலைக்குப் போயிடுறேன். குழந்தைகளை நான் பார்த்துக்கிறேன்.”
சுருக்கமாகச் சொன்னால், நான் House Husband ஆகிவிடுவேன் என்று சொல்லிருந்தேன்.
அவள் அப்போது அதை நம்பவில்லை. அது வெறும் பேச்சுதானே என்று நினைத்துக்கொண்டாள்.
COVID வந்தது.
எங்கள் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே, எனக்கு Permanent Work From Home வசதி இருக்கும் வேலை கிடைத்தது.
நான் அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நான் என் மனைவியிடம் சொன்ன விஷயம் இவ்வளவு சீக்கிரத்தில் உண்மையாகிவிடும் என்று.
இப்போது என் குழந்தைகளுக்கு ஐந்து மற்றும் மூன்று வயது.
கடந்த ஐந்து வருடங்களாக நான் பெரும்பாலும் வீட்டிலிருந்துதான் வேலை செய்கிறேன். அதனால் அவர்களுடைய வளர்ச்சியில் எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் நான் தவறவிடவில்லை.
அவர்கள் முதன்முதலாக புரண்டு படுத்தது, தவழ்ந்தது, நடந்தது, பேச ஆரம்பித்தது என்று எல்லாவற்றையும் நான் பார்த்திருக்கிறேன்.
என் மகனும், என் மகளும் வளர்ந்த ஒவ்வொரு கட்டத்திலும் நான் அங்கே இருந்திருக்கிறேன்.
COVID முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு, என் மனைவிக்கு office போக வேண்டிய நிலை வந்தது. அவளுடைய வேலையில் Hybrid option இருப்பதால், வாரத்தில் மூன்று நாட்கள் office செல்ல வேண்டும்.
அவள் குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரம் குறைந்துவிட்டது.
அவள் ஒவ்வொரு முறையும்,
“குழந்தைகளை ரொம்ப miss பண்றேன்…”
என்று சொல்வாள்.
அவள் அப்படிச் சொல்லும்போதெல்லாம், எனக்கு என் அம்மாதான் நினைவுக்கு வருகிறார்.
நாங்கள் ஒரு Middle Class குடும்பம். அதனால் என் அம்மாவும் அப்பாவும் இருவருமே வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள்.
என் அப்பா அதிகம் படிக்காததால் பெரிய வேலைக்குச் செல்ல முடியவில்லை. என் அண்ணனுக்கு ஆறு மாதம் இருக்கும் போதே அம்மாவின் Maternity Leave முடிந்து, அவள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார். எனக்கோ, மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோதே என் அம்மா வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டார்.
அந்தக் காலத்தில் எங்கள் குடும்பத்தின் பொருளாதார நிலை அப்படி. அம்மா வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தால், அந்த வருமானத்தை இழக்க வேண்டியிருக்கும். எங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளவும் முடியாது.
அதனால் வேலைக்குச் செல்வதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை.
நான் பெரும்பாலும் என் அப்பாவின் தம்பியின் மனைவியான சித்தி வீட்டில்தான் வளர்ந்தேன்.
என் சிறு வயதில் நடந்த பல விஷயங்களைப் பற்றி அம்மா இப்போதும் அடிக்கடி சொல்வார்.
“உங்க ரெண்டு பேரும் சின்ன பிள்ளைகளா இருந்தப்போ பாத்துக்க முடியலையே…” என்று.
அந்த வலியின் ஆழம் எனக்கு அப்போது புரியவில்லை.
ஆனால் இப்போது என் மனைவி குழந்தைகளை miss பண்ணுகிறேன் என்று சொல்லும்போதெல்லாம், என் அம்மா எப்படி உணர்ந்திருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது.
அதிகாலையிலேயே நாங்கள் எழுவதற்கு முன்பே அம்மா வேலைக்குக் கிளம்பிவிடுவார். மாலை வீட்டுக்கு வரும்போது, பல நேரம் நாங்கள் தூங்கியிருப்போம்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் கொஞ்சம் நேரம் கிடைக்கும். ஆனால் அன்றும் அம்மாவுக்கு வேலை இருக்கத்தான் செய்யும். அந்தக் காலத்தில் Washing Machine கிடையாது. துணி துவைக்க வேண்டும், சமைக்க வேண்டும், எங்களைக் கவனிக்க வேண்டும். அதனால் ஞாயிற்றுக்கிழமையும் முழு நாளும் எங்களுடன் செலவழிக்க முடியாது.
சாப்பிட்ட பிறகு மதிய நேரத்தில் கிடைக்கும் அந்தக் கொஞ்ச நேரம்தான் எங்களுக்கான நேரம்.
நானும் என் அண்ணனும் அம்மாவின் மடியில் படுத்துக்கொள்வோம். அவள் எங்கள் தலைமுடியை கோதிவிடுவாள்.
நாங்கள் எதையாவது கதை பேசிக்கொண்டிருப்போம். அப்போது அந்தக் கதைகளுக்கு எந்த அர்த்தமும் இருக்காது.
இப்போது யோசித்துப் பார்த்தால், அந்தச் சின்னச் சின்ன நேரங்கள்தான் எனக்கு என் குழந்தைப் பருவத்தின் அழகான நினைவுகளாக இருக்கின்றன.
அதனால்தான், நான் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் முன்பே என் மனைவியிடம் அந்த வார்த்தையைச் சொன்னேன்.
“நான் வீட்டிலிருந்து இருந்து குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று.
சில நேரங்களில் என் உறவினர்களும், cousins-உம் என்னிடம் கேட்பார்கள்.
“என்னப்பா… வீட்டுலயே இருந்து போர் அடிக்காதா?”
“வெளியுலகத்தையே miss பண்ண மாட்டியா?”
அவர்களிடம் நான் என்ன சொல்ல?
என் குழந்தைகளும், என் மனைவியும் தான் என்னுடைய உலகம் என்று எப்படி விளக்குவது?
அவர்களுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நாளையும் நான் ரசிக்கிறேன்.
ஏனென்றால், நான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையை வேறு எதற்காகவும் இழக்க விரும்பவில்லை.
வாழ்க்கையின் கடைசியில் திரும்பிப் பார்க்கும்போது…
நான் இன்னும் கொஞ்சம் வேலை செய்திருக்கலாமே என்று நினைப்பேனா?
அல்லது,
என் குழந்தைகளுடன் இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்கலாமே என்று நினைப்பேனா?